வெள்ளி, 2 அக்டோபர், 2020

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த குறுகலான வீதிகளின் ஜனசஞ்சாரம் கடந்து டாக்ஸி பயணித்துக் கொண்டிருந்தது.  ‘ஜல்தி ஜானா ஹை பாய்’ என்று நான் கற்றறிந்த ஹிந்தி கையளவு மட்டுமே என அறியாத அந்த ட்ரைவர் கடலளவு ஹிந்தியில் சொன்ன பதில் எதுவும் விளங்கவில்லை. பரவாயில்லை, இங்கு நான் பணம் கொடுப்பவன்.  பணத்தின் ஒலிக்கு முன்னால் எந்த மொழியும் ஒடுங்கிப்போகும் வர்த்தக உலகின் பிரஜையாய் மாறிக் கொண்டிருந்த எனக்கு, அவன் சொல்வதன் பொருள் புரியவேண்டியது அவசியமாய் படவில்லை.  தமிழ்நாட்டின் ஒரு மூலையில் பெயர் அறியப்படாத ஒரு கிராமத்தின் வயல்வெளியிலிருந்து சென்னையின் வெயில்வெளிக்கு புலம் பெயர்ந்து, அதன் வியர்வைத்துளியின் உப்புசத்திற்கு உடலையும் மனதையும் நான்கு வருடமாய் பழக்கி விட்டு, பம்பாயெனும் பெரிய கானகத்துக்குள் இரையையும் எனக்கான இருப்பையும் தேடி வந்த எனக்கு, இந்த மூன்று மாதம் இருபத்திநாலு வருட வேர்களின் திசையை புரட்டி போட்டுக் கொண்டிருந்த அனுபவம். கிராம வாழ்க்கை வீட்டுக் கிழவியின் சீடை போன்றது,   கைப்பிடிக்குள் அடங்கிக் கொண்டு, நாவின் நுனியை விட்டு நீங்காத சுவை கொண்டது. சென்னை வாழ்க்கை அண்ணாச்சி கடையின் முறுக்கு போன்றது, வளைந்து குழைந்து மொறு மொறு சுவையோடு, ஆனால் கீழே விழுந்து விழாமல் பிடித்துக் கொள்ள வேண்டிய பதட்டம் கொண்டது. பம்பாய் வாழ்க்கை லாலா கடை மிக்சர் போல, இன்னதென பிரித்து பார்க்க முடியாத கலவையான சுவை, கைக்குள் வைத்து திங்கவும் முடியாது, தின்னாமல் இருக்கவும் விடாது.  பம்பாய் என்னையும் நான் பம்பாயையும் கொஞ்சம் கொஞ்சமாய் கைக்குள் அடக்கவும் முடியாமல், விடவும் முடியாமல் தின்று கொண்டிருந்தோம்.

 

60களின் கடைசியில் பிறந்தவன் நான். ஊர் வடுகபட்டி, மதுரை மாவட்டம், அப்பா குறுநில விவசாயி, ஒரு அண்ணன், பொறுப்பானவன். அம்மா ஆடம்பரமில்லாதவள், எங்களை இயக்கிய சக்தி. அளவான அமைதியான குடும்பம். ஒரு கடலை பொட்டலம் பத்து காசு, ஒரு நாளுக்கு ரெண்டு பொட்டலம் வாங்கினாலும் ஒரு மாசத்துக்கு ஆறு ரூபா சம்பாதிச்சா போதும் என்று கணக்கு போடுவது தான் எட்டு வயதில் எனக்கிருந்த உலக அனுபவம். எங்கள் ஊர் ஆரம்பபள்ளி சத்துணவின் புண்ணியத்தால் பிள்ளைகள் நிறைந்து இருந்தது.  பள்ளி போய் வருவது, அக்கம் பக்கத்தில் இருந்தவரோடு சேர்ந்து கோலி ஆடுவது, அப்பா, அம்மாவோடு வயலில் வேலை செய்வது என்று வாய்க்கால் நீர் போல பெரிய அலைகளில்லாத வாழ்க்கை.  பத்து வயதிருக்கும் அப்போது, சுதந்திர விழாவிற்கு மாவட்ட கலெக்டர்  கொடியேற்ற வந்திருந்தார், சௌந்தர் சாரின் நண்பராம்.  முழுதும் வெள்ளை நிறத்தில் பார்க்க கம்பீரமாய் வந்து நின்ற அம்பாசிடர் காரில் இருந்து இறங்கி மிடுக்காக நடந்து வந்தார். ஜெய்சங்கர் மாதிரி திடமான தோற்றம், கசங்காத சட்டை, பலபலவென பாலிஸ் போட்ட ஷீ, டக் இன் செய்து கும்பிடும் போது இதயக்கனி எம்.ஜி.ஆர் போலவே வசீகரமாய் இருந்தார்.  மிக அழகான தமிழில் அங்கங்கு ஆங்கிலம் கலந்து அவர் பேசியது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மேல்தட்டு வாசத்தை மண் வாசனையோடு கலந்து கொடுத்தது போல இனிமையாய் இருந்தது. அவர் உடல்மொழியும் தோரணமும் பார்ப்பவர் கண்களுக்கு காண கிடைக்காத விசித்திரத்தை  கண்ட உணர்வை ஏற்படுத்தி இருந்தது. இவரு நெச கலெக்டரா சினிமா பட ஹீரோ கணக்கா இருக்காப்ல, சண்ட எல்லாம் நல்ல போடுவாரு போலடா னு எதுத்த வீட்டு முருகேசன் வெள்ளந்தியாக கேட்டது இன்னும் நினைவில் இருக்கிறது.  ஏதேதோ பேசினார், நடு நடுவில் கூட்டம் உரக்க கை தட்டியது.  இதையெல்லாம் தாண்டியும் என் கண்களின் குவிதத்தை வேறொன்று சுண்டி இழுத்துக் கொண்டே இருந்தது. அவரது இடது கை மணிக்கட்டில் பரமசிவனின் பாம்பு போல வளைந்து ஒட்டிக் கொண்டிருந்த தடியான அந்த கைக்கடிகாரம் தூரத்தில் இருந்தும் கண்ணை பறித்தது. பேசும் போதும் அவ்வப்போது அவர் தன்னிச்சையாக கடிகாரத்தை பார்த்துக் கொண்டது மிகவும் ஸ்டைலாக இருந்தது.  வெறும் கைகளோடு பேசுவது போல் கற்பனை செய்து பார்த்தேன், அவ்வளவு ஒன்றும் அவர் மிடுக்காக தெரியவில்லை. ஒரு வேளை அந்த கடிகாரம் தான் அவரது கம்பீரத்தை முழுமை செய்ததோ என்று எண்ண தோன்றியது.    மீனாட்சி ஸ்டுடியோவின் காமராமேன் நிகழ்ச்சியை விலை உயர்ந்த காமிரா கொண்டு படமாக்கி கொண்டிருக்கையில் எந்த கருவியும் இல்லாமல் எனது மனதிற்குள் காலெக்டரையும் அவரது கடிகாரத்தையும் படம் பிடித்துக் கொண்டிருந்தேன்.

அன்று வீட்டிற்கு வந்தும் மீண்டும் மீண்டும் கலெக்டரைப் பற்றி சிலாகித்துக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் பொறுமையாகவும், பெருமையாகவும் கேட்டுக் கொண்டிருந்த அம்மா “நீயும் நல்லா படிச்சா கலெக்டரா ஆகி ராசா போல வந்து இறங்குவய்யாஎன்று இயல்பாய் சொன்னாலும், ‘அவையிருப்ப முந்தி இருப்பவனாய்’ ஒரு நொடி அவள் என்னை கற்பனை செய்து பாத்திருக்க வேண்டும் என்றே தோன்றியது. கற்பனை செய்ததிலேயே அவள் முகத்தில் அப்படி ஒரு புன்னகை.  முதல் முறையாக எனது எல்லை மாதம் ஆறு ரூபாய் சம்பாதியத்தைக் தாண்டி என்னை அறியாமலேயே விரிந்து கொண்டிருந்தது.

 

சரியான நேரத்திற்கு விமான நிலையம் வந்தடைந்திருந்தேன்.  டாக்ஸி டிரைவரின் கையைப் பிடித்து நன்றி சொன்னேன்.  கீழ்நிலையில் இருந்து மேலே எழும் ஒருவனின் விழுமியம் அவனது பலவீனமாக பார்க்கப்படுமோ என்று இந்த சமூக படிநிலைகள் உருவாக்கும் ஒரு தாழ்வு மனோபாவம் எனக்குள் முழுதாய் வியாபித்திருக்கவில்லை போலும். நினைக்கும் போது ஆறுதலாய் இருந்தது. பையை தூக்கிக் கொண்டு வேக வேகமாய் உள்ளே நுழைந்தேன். உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த வலி உடைத்து வெளி வர வலிமை குன்றிய கணங்களை தேடித் திரிந்து கொண்டிருந்தது. காலையில் இருந்து என்னை சூழ்ந்து இருந்த படப்படப்பின் வெளிப்பாடாய் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில மணித்துளிகளை கண்ணீர் இரவல் வாங்கிக் கொண்டிருந்தது.  வாழ்க்கை ஏன் இப்படி மனப்பிறழ்வுகளோடு சுற்றிக் கொண்டிருக்கிறது என்று கோபமாய் வந்தது.  பிரபஞ்சத்தின் இறைச்சல் அறியாத ஒரு குட்டையில் தனக்கென ஒரு சிறு உலகம் அமைத்துக் கொண்டு அமைதியாய் வாழ்ந்திருந்த மீன்குட்டியைத் தூக்கி காட்டாற்றின் அடங்காத வேகத்தில் வீசி எறிந்து, அது திசை தெரியாத போக்கில் போராடி, அத்தனை போராட்டங்களையும் தாண்டி கடலின் பேரமைதிக்குள் புக நினைக்கும் தருணம் ஒரு சூறாவளி கொண்டு அதன் இருப்பை நிலைகொள்ளாமல் செய்து விடுகிறது.  கடந்த ஒரு வருடமாக புதிதாய் சிறகுகளை வளர்த்து விட்டு, எல்லையற்ற இந்த உலகத்தில் எனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள என்னை மேல்நோக்கி பறக்கவிட்டு விட்டு புது உயரங்கள் நோக்கி பறக்க எத்தனிக்கையில் கவண் கொண்டு தாக்கி விடுகிறது வாழ்க்கை.  முதல் முறையாக விமானம் ஏறுகிறேன். மற்றொரு சமயத்தில் இது நிகழ்ந்திருந்தால் எனது பனிரெண்டு வருட தேடுதலுக்கு கிடைத்த சன்மானமாய் நினைத்திருப்பேன்.  ஆனால் நான் விமானம் நாடி வந்தது, சமூக படிநிலைகளில் நான் மேலேறி வருவதற்கான அடையாளமாய் அல்ல. என் அடுத்த தலைமுறைக்குமான கனவுகளையும் தூக்கி சுமந்த ஒரு நல்ல மனிதனின் கடைசி நிமிடங்களில் ஒரு சிலவாவது எனது நினைவு படுகைக்குள் பொத்தி வைப்பதற்காக, நீண்டு நிற்கும் நேர பாம்பை தாண்டிச் செல்வதற்க்காக. தன்னிச்சையாய் நேரம் பார்க்க கைகளில் இருந்த கடிகாரத்தை பார்த்த கணத்தில், காலத்திற்கு எதிரில் கையாளாகாதவனாய் உணர்ந்தேன். கடந்து சென்றவர்களின் கூரிய பார்வையிலேயே கண்களின் பிரவாகத்தை அறிந்தவனாய் அவசர அவசரமாக கண்களைத் துடைத்துக்கொண்டேன்.  தோல்விகள் தந்த காயங்களை விட வெற்றிக் கணங்களில் வெறுமையாய் நிற்பது இன்னும் வலிக்கிறது. விமான நிலைய வழக்கங்கள் முடித்து உள்ளே காத்திருக்கும் நேரம், கைப்பையைத் திறந்து உள்ளே இருந்த அந்த சிறிய பெட்டியை எடுத்து கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.  புராண கதைகளைப் போல் இந்த நிமிடம் அந்த பெட்டிக்குள் இருந்த கைக்கடிகாரத்தின் டிக் டிக் கிலேயே எனது இதயம் துடித்துக் கொண்டிருந்தது.

அந்த கலெக்டரின் வருகைக்கு பிறகு கடிகாரம் மீதான எனது பற்று நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருந்தது.  பழைய பேப்பர்களில் கடிகார படமோ, கடிகாரம் அணிந்தவரின் படமோ இருந்ததால் டீக்கடை மாயி அண்ணனிடம் கெஞ்சி அதை மட்டும் கிழித்து வைத்துக் கொண்டேன்.  மணிகண்டன் சாரிடம் அவர் கடிகாரம் எப்படி அலாரம் அடிக்கும் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  வாட்ச் கட்டாமல் வந்தால் ரஜினிக்கும் கமலுக்கும் கூட கை தட்ட பிடிக்காமல் இருந்தேன். எதையோ நோக்கி வாழ்க்கை நகர, காலம் காட்டும் கடிகாரம் நோக்கியே என் வாழ்க்கை நகருவது போல் இருந்தது.  ஜவ்வு மிட்டாய் விற்பவரிடம் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மாதிரி வாட்ச் செய்து கையில் ஒட்டிக் கொண்டேன். அதையே நிஜ வாட்சாய் பாவித்து திண்பதற்கு மனமின்றி அரிசி சுமந்து செல்லும் எறும்பு போல நினைவுகளை சுமந்து திரிந்தேன்.  படித்தால் பெரிய ஆபிஸராக ஆகலாம், அந்த கலெக்டர் போல் கம்பீரமாய் கையில் வாட்சுடன் வந்து இறங்கலாம் என்று ஆழ்மனதில் பதிந்து போனது.  படிப்பின் மீது ஆர்வம் வந்தது. மழை பார்த்து விவசாயம் செய்து கொண்டிருந்த அப்பாவின் வறுமையை படிப்பு மட்டுமே விரட்டும் என்று இளமையிலேயே எப்படி புரிந்தது தெரியவில்லை. மழை பொய்த்து போன காலத்திலும் பசி மட்டும் பொய்ப்பதில்லை, சில நாட்கள் யாரும் இல்லாத நேரத்தில் அம்மாவிடம் புலம்பும் அப்பாவின் கண்ணீரை அவரது முறுக்கு மீசை அடைத்து வைத்திருந்தது. எப்படியோ அண்ணனுக்கு இயல்பாகவே படிக்க வந்தது.  எனக்கு கைகடிகாரத்தின் மோகம் கல்வியெனும் கதவுகளை திறக்க உதவியாய் இருந்தது.  பின்னாளில் அதுவே பிடித்தும் போனது.  நாங்கள் வாங்கிய ஒவ்வொரு மதிப்பெண்ணும் நாளையை பற்றிய நம்பிக்கைகளை அப்பாவிற்கு கொடுத்தன.  இரட்டிப்பாய் உழைத்தார், திரைகடல் ஓடாவிட்டாலும் திரவியம் தேடுவதில் தீவிரமானார். ‘நாளைக்கு எம்புள்ளைங்க பெரிய படிப்பு படிக்கனும்.  காசில்லைன்னு எம்புள்ளைங்க படிப்ப விட்ற கூடாது’ என்பதில் உறுதியாய் இருந்தார். தீபாவளி, பொங்களுக்கு கூட தனக்கென வாங்கிக்கொள்ளாமல் பணம் சேர்த்தார். 

எட்டாம் வகுப்பு படிக்கும் போது அந்த வருடம் பனிரெண்டாம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் வாங்கிய பக்கத்து ஊர் அண்ணனுக்கு அந்த பள்ளியின் பிரின்சிபால் ஒரு வாட்ச் கொடுத்தது கேள்விப்பட்டு அந்த பள்ளிக்கே மாற்றலாகி சென்றேன்.  தினமும் 4 கிலோமீட்டர் போக வேண்டும்.  ஒரிரு பேருந்துகள் வரும், அதை விட்டுவிட்டால் நடந்து போக வேண்டும்.  பனிரெண்டாம் வகுப்பில் நான் வாங்க போகும் அந்த கடிகாரத்தின் ஓசை களைப்பில்லாமல் என்னை நடக்க வைத்தது.  நான் நடக்கும் போது டிக் டிக் என்று சத்தம் வருவதாக கற்பனை செய்து கொண்டே நடந்திருக்கிறேன்.  கடிகார முள் போல் விடாது படித்ததில் முதல் ரேங்க்கை பன்னிரெண்டாம் வகுப்பு வரை கங்காரு குட்டி போல் பாதுகாப்பாய் கொண்டு வந்தேன்.  எதிர்பார்த்தது போலவே முதல் மதிப்பெண் வாங்கி பிரின்சிபால் வாட்ச் தரும் நாளுக்காக காத்திருந்தேன்.

அன்று காலை இடி போல் அந்த செய்தி வந்தது.   பிரின்சிபால் மாற்றலாகி போகிறாராம்.  அண்ணா பல்கலைகழகத்தில் இஞ்சினியரிங் சீட் கிடைத்து விடும் என்று எல்லோரும் சொன்னார்கள்.  கையில் வாட்சுடன் முதல் நாள் வகுப்பறை போவது போல் எத்தனை கற்பனை.  ஒவ்வொரு வருடமும் அப்பா இப்படித்தான் மழைக்கான கற்பனையில் இருந்திருப்பார்.  அப்பாவின் வலியை அன்று முழுதாய் உணர முடிந்தது.  இரண்டு நாள் உண்ணாமல் உறங்காமல் சுற்றித் திரிந்தேன்.  மதியம் அப்பாவுடன் வயலுக்கு போயிருந்தேன். பக்கத்து வீட்டு சரவணன் கால் தெரிக்க ஓடி வந்தான் ‘அண்ணே’, ஒங்க பிரின்சிபால் வந்துருக்காராம் ஓங்கம்மா கூட்டார சொல்லுச்சு’.  பிரின்சிபால் எதற்கு வந்தார் என்பதறியாமல் வேகவேகமாய் வீடு வந்து சேர்ந்தேன். ஒரு கையளவு பெட்டியுடன் அவர் எனக்காக காத்திருந்தார்.  அதுவாகத்தான் இருக்கும்.  ஓடி வந்ததை விட வேகமாய் மூச்சு இரைத்தது.  ‘வாடா படிப்பாளி, சந்தோஷப்படுமா நல்ல புள்ளைய பெத்துருக்க.’  அம்மா பூரித்தாள்.  ‘ இங்க வாடா தம்பி’, அன்போடு அருகில் அழைத்தார் ‘எம் பையன், அண்ணா யுனிவர்சிட்டில போயி கைல வாட்ச் இல்லாம இருந்தா எப்படி, கைய நீட்டு’ என்று வார்த்தை அற்று போன அந்த வினாடியில் என் கைப்பற்றி அந்த கடிகாரத்தை கையில் கட்டி விட்டார்.  மொழிகள் தோற்கும் இடத்தின் வெறுமையை கண்ணீரே நிரப்புகின்றது.  அப்படியே அவர் காலில் விழுந்தேன்.  ‘நல்லா இருப்படா, நாளைக்கு பெரியாளா வந்து நம்ம ஊருக்கு ஏதாச்சுப் பண்ணு, பண்ணுவ, நம்பிக்கை இருக்கு.’ வார்த்தைகள் உடைந்தாலும் கம்பீரமாய் சொல்லி முடித்தார். பெரிய சொத்தில்லாவிட்டாலும் நல்ல மார்க் வாங்குறவனுக்கு 400 ரூபாய் வாட்ச் வாங்கி கொடுக்கும் அந்த மனசு தெய்வத்திற்கு சமம். கனவுகள் விதைத்து செல்லும் மனிதர், அப்பாவின் இடத்திற்கும் மேலே உயர்ந்து நின்றார்.  பிரின்சிபால் வந்து போன அடுத்த இரண்டு நாட்கள் குளிக்கும் நேரம் தவிர கையை விட்டு இறங்காத கடிகாரத்ததில் அடிக்கடி மணி பார்த்தேன்.  மரத்தடியில் நின்று கைகளை மைக்காய் பிடித்து சொற்பொழிவாற்றினேன், பேச்சின் நடுவே கைகளை உயர்த்தி அப்படியும் இப்படியும் ஆட்டி கடிகாரத்தை சரி செய்து கொண்டேன். மூன்றாம் நாள் மதியம் சாப்பிட வந்தால் அம்மா ஒரு பக்கமாய் ஒருக்களித்து விழுந்து கிடந்தாள்.  நெஞ்சில் அடித்துக் கொண்டு வண்டி பிடித்து அரசு ஆஸ்பத்திரி கொண்டு போய் சேர்ந்தோம்.  டவுன் ஆஸ்பத்திரி அழைத்து போக சொன்னார்கள்.  கல்லூரிக்காக சேர்த்து வைத்த காசில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு, அப்பா மருந்து மாத்திரை என அலைந்தார்.  மூன்று நாட்களில் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் சரியானார். இனி வரும் காலம் முழுதும் மருந்துகளின் துணையோடு கழிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.  வீட்டிற்கு வந்தவருக்கு அக்கம் பக்கமிருந்து அன்பும், சாப்பாடும் வந்து சேர்ந்தது.  சாயந்திரம் மருந்தெல்லாம் வாங்கி விட்டு வந்த அப்பா, உடனே வெளியில் கிளம்பினார். எதிர்பாராத செலவில் அப்பாவின் கையிருப்பில் கொஞ்சம் கரைந்திருக்க வேண்டும். கல்லூரி சேரும் நாள் நெருங்க நெருங்க அப்பாவின் படபடப்பு அதிகமாகிக் கொண்டே போனது. கனவுகள் ஒரு பக்கம் வறுமை ஒரு பக்கம், எல்லா நேரமும் கனவுகள் வென்று கொண்டே இருப்பதில்லை. அப்பாவின் உறக்கமில்லா இரவுகளை பார்க்க மனம் கனத்தது. மாலை வீடு திரும்பிய அப்பாவிடம், முன்னூறு ரூபாய் நீட்டினேன்.  ஒன்றும் புரியாமல் என்னை நிமிர்ந்து பார்த்தார்.   கனம் குறைந்து இருந்தது, மனதிலும், கையிலும்..

விமானம் பம்பாயின் நிலப்பரப்பின் மேல் எல்லையில்லாத காற்றிற்குள் தன்னை செலுத்திக் கொண்டிருந்தது.  சிறியதாய் தெரிந்த கட்டிடங்கள், உயரப் போக போக வறுமையும் இப்படித்தான் தெரியும்.   அந்த நம்பிக்கையே கல்லூரி வாழ்வை நகர்த்தியது.  உடல் நலம் குறைந்த அம்மா, மனநிலை சரியில்லாத மழை, கல்லூரியில் இரு பிள்ளைகள் என எப்படியோ சமாளித்த அப்பாவிடம் வாட்ச் வேண்டும் என்று கேட்க மனம் வரவேயில்லை.  அங்கங்கு ஏதாவது போட்டியில் ஜெயித்தது, சேர்த்து வைத்தது என ஐம்பது ரூபாய்க்கு பெயர் தெரியாத ஏதோ ஒரு வாட்ச்சை வாங்கி கொண்டேன்.  ஆனால் அது என் மனதை நிறைக்கவில்லை.  சிட்டிசன், ஹச்.எம்.டி. எல்லாம் அவ்வப்போது கனவினை நிறைத்துப் போனது. நான்காம் வருடம் ஒரு பெரிய நிறுவனத்தின் சென்னைக் கிளையில் இன்டர்ன்ஷிப் வாய்ப்பு கிடைத்தது. இது வரை புத்தகத்திலும், பேப்பரிலும் படித்த வர்த்தக உலகத்தை உள்ளிருந்து பார்க்கும் ஒரு வாய்ப்பு.  வாய்ப்புகளைத் தேடியே பழகிய வாழ்க்கை, கிடைத்த இந்த வாய்ப்பை சரியாய் பயன்படுத்திக் கொள்ள உதவியது. எனது அடையாளங்களை இரவு பகலாக பதித்தேன். மூன்றாவது மாதத்தில் அவர்களுடைய பம்பாய் கிளையில் நான் படிப்பு முடித்தவுடன் சேர்த்து கொள்ளலாம் என சொன்னார்கள். மாதம் ரூ.2,800 சம்பளம். என்னை அறியாமலேயே கண்கள் பனித்தன.  இன்டர்ன்ஷிப் சம்பளமாக மூன்று மாதத்திற்கு 1500ரூ கொடுத்தார்கள். முதல் முதலில் சொலையாய் அவ்வளவு பணம் பார்த்தேன். முதலில் ஊருக்கு வந்து அப்பா, அம்மாவிடம் இதைச் சொல்லி ஆசிர்வாதம் வாங்கலாம் என்று வந்து சேர்ந்தேன். அப்பாவிற்கு கை, கால் நிலை கொள்ளவில்லை. அய்யனார் கோயிலுக்கு கடா வெட்டுவதாக வேண்டி இருந்தாராம்.  அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியவருக்கு இரட்டிப்பு சந்தோஷம். அரசு கருவூலத்தில் அண்ணனுக்கு வேலை கிடைத்தது.  இத்தனை வருடம் வளர்த்த பயிர் இனிமேல் நிழல் தரும் நேரம், எத்தனை சந்தோஷத்தில் இருந்திருப்பார் தெரியாது.  ரூ.1,000 அப்பாவிடம் கொடுத்து விட்டு, மீதம் 500 இல் சென்னை போனதும், ஒரு நல்ல வாட்ச் வாங்க வேண்டும். இரண்டு நாட்கள் 'மடை திறந்து பாடும் நதி அலை நான்' என்று சுற்றிக் கொண்டிருந்தேன்.

மாலையில் அம்மா அதிரசம் செய்து கொண்டிருந்தாள், அடுப்பில் செய்து கொண்டிருக்கும் போதே ஒன்றிரண்டு  எடுத்து சூட்டோடு சூடாக சாப்பிடுவதின் சுகமே சுகம். அண்ணனும் அப்பாவும் களைப்பாக வீட்டிற்குள் வந்தார்கள். அப்பா தயங்கிய படி அருகில் வந்து,  ‘ஏம்ப்பா, நீ வாங்குன சம்பளம் ஒரு 2,000 இருக்குமா?’  என்றார்.   ‘இல்லப்பா 1,500 தான்ப்பா’, என்றேன்.  ‘இல்லப்பா, வேல உறுதின்னு சொல்லிப்புட்டு இப்ப அந்த பெரிய ஆபிசர் 2000 ரூபா குடுத்தாதான் வேல, இல்லாட்டி உங்க அண்ணனுக்கு தகுதி இல்லைனு வேற யாருக்கோ அந்த வேலைய குடுத்துருவேன் னு சொல்லுறாப்ல. தகுதியிருக்கும் ஒருவன் தனக்கான இடத்தைப் பிடிப்பதற்கு இங்கே எத்தனைத் தடை. இத்தனை வருடம் பயின்ற கல்வி நியாயமாய் எனக்கு கோபத்தை தான் கற்பித்திருக்க வேண்டும். எதார்த்தத்திற்கு எதிரான நியாயத்தை எந்த கல்வியும் ஏனோ சொல்லித் தருவதில்லை. பிள்ளையிடம் கூட நேரடியாய் பணம் கேட்க தயங்கும் அப்பாவை நேருக்கு நேராய் பார்க்க முடியவில்லை. அப்பாக்களின் கோபங்களை எளிதில் கடந்து விட முடிகிறது, அவர்களின் கண்ணீரையும் பலவீனங்களையும் எதிர் கொள்வதுதான் மகன்களை உருக்கி விடுகிறது. 1500 ரூபாயை அப்படியே அப்பாவிடம் கொடுத்தேன்.  இத்தனை வருடம் பொறுத்தேன், இன்னும் சில மாதங்கள் தானே. நாளை என்பது இல்லையென்றால் மனிதர்கள் மிருகங்களாய் ஆகி இருப்பார்கள்.

விமானம் சீரான வேகத்தில் காற்றைக் கிழித்துக் பறந்து கொண்டிருந்தது. என்றாவது ஒரு நாள் அம்மாவையும், அப்பாவையும் விமானத்தில் எங்காவது அழைத்துப் போக வேண்டும் என்று பல நாட்கள் நினைத்ததுண்டு. ஆறு ரூபாயில் இருந்து, கைக்கடிகாரம் தாண்டி இன்று விமானம் வரையில் எல்லைகள் விரிந்து கொண்டேதான் போகிறது.   இன்னும் போகும்.  எல்லைக்கேது எல்லை.   பம்பாயில் வந்து முதல் மாதத் சம்பளம் பெரும்பாலும் புது வீட்டின் அட்வான்ஸ், புது உடை என்று என்னை இந்த வாழ்க்கைக்கு தயார்படுத்துவதற்கான முயற்சியில் கறைந்தது.

இரண்டாம் மாதம் ஊரின் சில கடன்களை அடைக்கவே சரியாய் இருந்தது.  இந்த மாத சம்பளத்தில் வாட்ச் வாங்கி விடாலம் என்ற உற்சாகத்தில்  இருந்தவனுக்கு, இன்று காலை தந்தி வந்திருந்தது. ‘Father Serious Start immediately’ என்று. பெரிய வீட்டில் மட்டுமே தோலை பேசி இருந்தது. அழைத்து விசாரித்ததில், அப்பாவிற்கு சிறுநீரக கோளாறு என்றும், காப்பாற்ற முடியாத நிலை என்றும் சொன்னார்கள். எத்தனை நாளாய் என்ன வலி இருந்ததோ, எதையும் வெளிக்ககாட்டியதில்லை அப்பா. தனக்கென எதுவும் இதுவரை செய்து கொண்டதே இல்லை.  நாங்களும் அவருக்கு உடல்நிலை சரியாக இருப்பதாகவே தான் நம்பியிருந்தோம்.  தலைவலி, காய்ச்சல் என்று அவர் படுத்ததாய் ஞாபகம் இல்லை.  எல்லாம் சரியாய் போய் கொண்டிருக்கும் வேலையில் பெரும் புயலாய் ஒரு செய்தி.  கறை சேர்ந்த பிறகு படகை உடைத்து விடுவது எந்த விதத்தில் நியாயம். அலுவலகத்திலேயே கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். மேனேஜரும், மற்றவர்களுமே விமானம் எடுக்க சொன்னார்கள்.  கையில் கொஞ்சம் பணமும் கொடுத்தார்கள்.   இந்த கடனை அடைத்து விடுவேன், அப்பாவிற்கு எப்படி என் கடனை அடைப்பேன்.  அவருக்கு இறுதியாக ஏதாவது வாங்க வேண்டும் என்றால், அவருக்கு என்ன ஆசை என்று கூட தெரியாது.  விமானத்திற்கு இருந்த நேரத்தில் தீர்க்கமான முடிவோடு கடைகளைத் தேடினேன். 700 ரூபாய் எச்.எம்.டி வாட்ச் எனது கைப்பையில் பத்திரமாய் சுவாசித்துக் கொண்டிருந்தது.

சென்னையில் இறங்கி அங்கிருந்து வாடகைக் கார் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தேன்.   நேற்றிலிருந்து அழுதழுது கண்கள் வற்றித்தான் கிடந்தன.  கம்பீரமாக வந்திறங்க வேண்டிய மகன் கவலையுடன் வந்திறங்கியது பார்க்க பிடிக்கவில்லையோ என்னவோ! நான் வந்த போது அங்கு அப்பா இல்லை.   இத்தனை வருடங்கள் அவரை சுமந்த உடலே அமைதியாய் படுத்திருந்தது.   அரை மயக்கத்தில் அம்மா, ஓடி வந்து கட்டிப்பிடித்து அழுத அண்ணன், ஆண் பிள்ளையென்று அடக்கி வைத்திருந்தானோ தெரியவில்லை.  சாய்ந்து அழ தோல் கிடைத்தும் வெம்மி அழுதான். அப்பா மீதான என் அன்பை நான் எப்பொழுதும் வெளிப்படுத்தியதாய் ஞாபகமே இல்லை. அவரின் இருப்பில் வார்த்தைகள் அன்பை சொன்னதில்லை. இன்று வார்த்தைகள் தேவைப் படுவதாயில்லை. நேற்றிருந்து பலமுறை அழுது முடித்திருந்தாலும், சலனமற்ற அப்பாவைப் பார்த்தும் நெஞ்சை அடைத்து மூச்சைக் கவ்விக் கொண்டு பீரிட்டு வந்தது ‘அப்பா’ என்ற அலறல். அப்பாவுடைய வெப்பம் நிறைந்த நினைவுகளை முழுவதும் மறைத்து விடுமோ என்ற பயத்தில் அவர் கைகளை தொட்டேன்.  இயக்கம் இன்றி சில்லிட்டிருந்த கைகளை மெதுவாய் உயர்த்தி நான் வாங்கி வந்த வாட்சை மாட்டினேன்.  பீறிட்டு வந்த அழுகையில் அவர் கரம் மீது முகம் பதித்து கதறினேன்.  அடங்கிப் போன நாடிக்கு மேல் ‘டிக், டிக், டிக்’ என்று எந்த சலனமுமின்றி துடித்துக் கொண்டிருந்தது கைக்கடிகாரம்..

சனி, 27 ஜூன், 2020

அன்பிற்கும் உண்டோ


இவன வளத்தது பத்தாது னு இந்த நாய கொண்டு வந்து விட்டுட்டு ஹாஸ்டல் போய்ட்டான், இத வாசல் தாண்டி உள்ள எல்லாம் விட மாட்டேன், சனியன் ஏதாச்சும் பண்ணினா யாரு வீட்ட சுத்தம் பண்ணிட்டே இருக்கது, வேளா வேளைக்கு சோறு போட்டு தொலைக்கிறேன் என்று வாசலிலேயே கட்டிப் போட்டு விட்டேன்.ஒரு வாரம் ஆகிடுச்சு, சோத்த தின்னுட்டு அது பாட்டுக்கு கெடந்துச்சு, இன்னைக்கு கொஞ்சம் மேலுக்கு முடியல, அதோட எதையோ சமச்சு அதுக்கு வச்சுட்டு அப்டியே அசந்து வாசல்ல உக்காந்துட்டேன், எப்பவும் வெடுக்கு வெடுக்குனு முழுங்குற நாயி இன்னைக்கு திங்காம என்னையே பாத்துட்டு இருந்துச்சு, மெல்ல பக்கத்துல வந்து என் மடில அப்டியும் இப்டியும் மூஞ்சிய முட்டிகிட்டு, ஏதோ என் வேதன புரிஞ்சா மாதிரி என் பக்கத்துல உக்காந்து என்னவே  உத்து பாத்துச்சு,  கருணை னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி,எனக்கு உள்ளுக்குள்ள என்னென்னவோ பண்ணுச்சு, அப்பா அம்மா ஞாபகம்  எல்லாம் வந்துடுச்சு, மெல்ல அதோட கயித்த அவுத்து விட்டேன், நான் எழுந்து உள்ள போக என் முந்தானைய புடிச்சிட்டடே ஒரு சின்ன உசுரு வீட்டுக்குள்ள வந்துச்சு...

நான் பெண்



கைப்பை,திறன்பேசி எல்லாம் பாலித்தீன் கவரில் போட்டுவிட்டு, மழையில் நனைந்து கொண்டே நடந்தேன், எவ்வளவு சுகம், மழையில் நனையாதே என்று அம்மா சொன்னதை மீறி நனைந்ததே முதல் விதிமீறல், எனக்கென்னவோ மழையில் நனையாதே என்று சொல்வது தான் விதிமீறலாய் தெரிந்தது. பரிட்சைக்கு படி என்றார்கள், பிடித்ததை படித்தேன்..இழுத்து மூடு என்றார்கள், கண்ணை மூடிக்கொள் என்றேன்..ஒருவனே கற்பென்றார்கள், பரிணாம வளர்ச்சி படி என்றேன்..புல்லானாலும் புருஷன் என்றார்கள், புல்லை வெளியே வை என்றேன்.. வாழாவெட்டி ஆவாய் என்றார்கள், வாழ்வை வெட்டியாய் ஆக்க விருப்பமில்லை என்றேன்.. துணையில்லாமல் வாழ முடியாது என்றார்கள், துணை தான் தேவை தலைவன் இல்லை என்றேன்.. திமிர் பிடித்தவள் தனியாக தான் இருக்க போகிறாய் என்றார்கள், இல்லை, இங்கே ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள், பெண்ணை சக மனுஷியாய் பார்க்கும் ஆண்கள் நிறைய இருக்கிறார்கள், அப்படி ஒருவனோடு வாழ்கிறேன், அப்படி ஒருவனை ஈன்றிருக்கிறேன், எனக்கான மழைத்துளிகளை எவரும் எனக்கு சொல்வதில்லை, எனக்கு தேவை இல்லாத குடைகளை எவரும் எனக்கு பிடிப்பதில்லை, விதிமீறல்களை மீறிக்கொண்டு என் ஆடை நனைத்த ஒவ்வொரு துளியையும் எண்ணிப் பார்த்து கொண்டே நடந்தேன்....

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...